பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அறிவித்து உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு அனுப்பி உள்ளார்.

கர்நாடாகாவில், ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், காலியான அந்த தொகுதிகளுக்கு கடந்த 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு  எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் பாரதிய ஜனதா கட்சி 11 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி இரண்டு இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதில் 7 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக, எடியூரப்பா தலைமையிலான பாஜக மாநில அரசு பெரும்பான்மை பெற்றுள்ளது.

இந்த நிலையில், செய்தியார்களை சந்தித்த, கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று,  காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சிஎல்பி) தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

“சட்டமன்றக் கட்சியின் தலைவராக நான் ஜனநாயகத்தை மதிக்க வேண்டு என்பதால், எனது ராஜினாமாவை சோனியா காந்தியிடம் சமர்ப்பித்துள்ளேன், ”என்றும், இந்த தேர்தலில் மக்கள் பாஜகவின் ஆபரேசன் கமலாவுக்கு எதிராக சிறந்த பாடத்தை கற்பிப்பார்கள் என எதிர்பார்த்தேன் என்று தெரிவித்துள்ளவர்,  மக்களின் ஆணையை மதிப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தனது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.