பத்திரிகையாளர்களுக்கு சிறை: கர்நாடக சட்டமன்றத்தில் தீர்மானம்!

பெங்களூரு,

ர்நாடக சட்டமன்றம் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. நேற்றைய கூட்டத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அவதூறு செய்திகள் வெளியிட்டதற்காக இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு, எலகங்கா தொகுதி பாரதியஜனதா எம்எல்ஏ  எஸ்.ஆர்.விஸ்வநாத் மற்றும் காங்கிரஸ் பி.எம்.நாகராஜ் ஆகியோர், தங்கள்மீது இரண்டு பத்திரிகைகள் தொடர்ந்து அவதூறாக எழுதி வருவதாக சட்டமன்ற உரிமைக்குழுவிடம் புகார் கூறியிருந்தனர்.

இதுகுறித்து சட்டமன்ற உரிமைக்குழு விசாரணை செய்து முடிவை அறிவித்துள்ளன. அதில்,  சட்டமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக  அவதூறு கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி, அவை மரபை  மீறியதாக உரிமைகுழு கூறியுள்ளது.

அதன்படி ‘ஹை பெங்களூர்’ பத்திரிகையின் ரவி பெலாகிரே (Ravi Belagere), எலகங்கா வாய்ஸ் (Yelahanka Voice) என்ற டேப்லாய்டு பத்திரிகையின் அனில் ராஜ் ஆகியோர்மீது உரிமைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.,

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, தீங்கு விளைக்குவிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிட்டதற்காக  ஓராண்டு தண்டனை விதிக்கும் வகையில், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஒராண்டு ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது கர்நாடக சட்டமன்றம்.

மேலும் அவர்களுக்கு தலா 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உரிமைக்குழுவினரின் விசாரணை மற்றும் பரிந்துரையை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கோலிவாட் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டமன்றத்தில்,  பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.