சூரத்: சையது முஷ்டாக் அலி டிராபி டி-20 இறுதிப்போட்டியில், தமிழக அணியை ஒரு ரன்னில் வீழ்த்திய கர்நாடக அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்துவருகிறது யைது முஷ்டாக் அலி டிராபி டி-20 கிரிக்கெட் தொடர். இதில் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதில், டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச முடிவுசெய்தார். அதன்படி களமிறங்கிய கர்நாடக அணி, நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ரோகன் கதம் அதிகபட்சமாக 35 ரன்களை அடித்தார்.

பின்னர், சற்றே கடின இலக்கை விரட்டிய தமிழக அணியில், விஜய் சங்கர் அதிகபட்சமாக 44 ரன்கள் அடித்தார். அபராஜித் 40 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட, 12 ரன்களை மட்டுமே எடுத்த தமிழக அணி 1 ரன்னில் கோப்பையைக் கோட்டைவிட்டது.

அஸ்வின் 16 ரன்களுடன் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். தமிழக அணி இதுவரை இக்கோப்பையை ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது.