தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது!: கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா

பெங்களூரு:

காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீர் திறக்க  கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவரும், கர்நாடக முன்னாள்  முதல்வருமான எடியூரப்பா கூறியதாவது:

“காவிரி மேற்பார்வை குழு உத்தரவை ஏற்ற முடியாது. அந்த குழுவின் முடிவை ஏற்றால், கர்நாடகாவுக்கு சுமார், 2.75 டிஎம்சி தண்ணீர் இழப்பு ஏற்படும். எனவே தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் விடக்கூடாது என்ற முடிவை கர்நாடக அரசு எடுக்க வேண்டும். அப்படி ஒரு முடிவெடுத்தால், ஆறரை கோடி கர்நாடக மக்களும் கர்நாடக அரசு முடிவுக்கு கட்டுப்படுவார்கள்.

yeddyurappa

கர்நாடக மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில், ஒரு துளி தண்ணீரையும் தமிழகத்திற்கு விடக்கூடாது என்பதே கர்நாடக பாஜக நிலைப்பாடு. உச்சநீதிமன்றத்திலும், காவிரி மேற்பார்வை குழுவிலும், கர்நாடக மாநில அரசின் வாதம் பலவீனமாக இருந்ததே, இந்த தோல்விக்கு காரணமாகும்.  தண்ணீர் திறப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறிவிட்டு, தண்ணீர் இல்லாமல் கஷ்டமாக உள்ளது என மாநில மக்களிடம் கூறும் இரட்டை நிலைப்பாட்டை அரசு எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட அரசு இருக்கும்வரை கர்நாடக மக்களுக்கு விடிவு காலம் கிடையாது” என்று ஆவேசமாக தெரிவித்தார் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா.

 

கார்ட்டூன் கேலரி