பெல்காம்

பெல்காம் காங்கிரஸ் தலவர்கள் பாக் தேசிய கீதத்துக்கு நடனம் ஆடியதாக பாஜக தலைவர் வெளியிட்ட வீடியோ போலி என போலீசார் கூறி உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பெலகாவி என அழைக்கப்படும் பெல்காம் நகர பாஜக பொதுச் செயலாளர் ராஜு தோபன்னவார்  கடந்த சனிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.  அதில் அவர் ஒரு வீடியோ கிளிப்பிங்கை வெளியிட்டார்.  அதில் பெல்காவி மாநகராட்சியின் காங்கிரஸ் உருப்பினர்கள் சிலர் பாகிஸ்தான் தேசிய கீதத்துக்கு நடனமாடும் காட்சி பதிவாகி இருந்தது.

ராஜு ”அந்த வீடியோவில் முசாமில், அஜீம் மற்றும் நஜீம் ஆகிய மூவரும் உள்ளார்கள்.  இவர்கள் இது போல பாக் தேசிய கீதத்துக்கு நடனமாடுவது தேசியத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.  இதன் மூலம் இவர்களுக்கு தேச விரோத எண்ணங்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவு உணர்வும் உள்ளது தெளிவாகிறது” என தெரிவித்தார்.   அத்ஹ்டுடன் அவருடைய மொபைலில் உள்ள இந்த வீடியோ கிளிப்பிங்கை உள்ளூர் சேனல்களுக்கும் ஓளிபரப்பக் கோரி அனுப்பி உள்ளார்.

இது குறித்து போலீஸ் துணைக் கமிஷனர் அமர்னாத் ரெட்டி கூறுகையில் “இந்த வீடியோ உண்மையானது அல்ல.  ஒரு போலியான வீடியோ ஆகும்.   இது சில அமெச்சூர் வீடியோ கிராபர்களால் மிக்சிங் செய்யப்பட்டு யு ட்யூபில் ஏற்றப்பட்டுள்ளது.    வீடியோவை எடிட் செய்தும் ஆடியோவை மிக்ஸ் செய்தும் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ இப்போது யு ட்யூபில் இருந்து நீக்கப் பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், “இது போல வீடியோக்க்கள் யு ட்யூபில் உலவுவது சகஜமே.  பழைய மொகல் ஏ ஆஜம் பாடலுக்கு ஐஸ்வர்யா ராய் நடனம் ஆடுவது போலவும்,   தற்போதைய தமிழ் பாடலான ஆலுமா டோலுமா பாடலுக்கு சிவாஜி கணேசன் ஆடுவது போலவும் உள்ள வீடியோக்களில் இதுவும் ஒன்று” எனக் கூறி உள்ளார்.