சபாநாயகர் ரமேஷ்குமார்மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! கர்நாடக பாஜக முடிவு

பெங்களூரு:

ர்நாடக அரசியலில்  பரபரப்பு நீடித்து வரும் நிலையில், எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு ஜூலை 31ந்தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாரதியஜனதா கட்சி முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

வரும் திங்கட்கிழமை சபாநாயகர் ரமேஷ்குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக உறுப்பினர்கள் கொண்டு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார் இருந்து வருகிறார். சமீபத்தில் கவிழ்க்கப்பட்ட குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியின்போது, ஆட்சிக்கு எதிராக 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா கொடுத்திருந்த நிலையில், 2 சுயேச்சைகள்,1 ஜேடிஎஸ் எம்எல்ஏ மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், மற்ற 14 எம்எல்ஏக்கள் மீது  நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார்.  ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக சபாநாயகர்  செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கர்நாடக சட்டமன்ற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் திங்கட்கிழமை அவர்மீது சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் பாஜக உறுப்பினர்கள் தீவிரமாக செயலாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில்,  முன்னதாகவே நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக வும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு பதிலாக பாஜக மூத்த உறுப்பினரான கே.ஜி.போபையாவை சபாநாயகராக நியமிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இவர் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, கடந்த ஆண்டு, கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்ததும், எடியூரப்பாவை மாநில கவர்னர் வஜுபாய் வாலா முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்ததும், உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா திரும்பியபோதும், அந்த 2 நாட்கள் மட்டும் சபாநாயகராக கவர்னரால் நியமிக்கப்பட்டவர் போபையா.

14 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக திங்களன்று  சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்படும்  என்று பாஜக வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி