லவ் ஜிகாத் தடை சட்டத்தை வரவேற்கும் கர்நாடக பாஜக

பெங்களூரு

வ் ஜிகாத் தடை சட்டத்தை வரவேற்பதாகக் கர்நாடக சுற்றுலா அமைச்சர் சி டி ரவி மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கூறி உள்ளனர்.

வலது சாரி அமைப்புக்களால் லவ் ஜிகாத் என்னும் சொல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு இஸ்லாமிய இளைஞர் ஒரு இந்துப் பெண்ணை காதலித்து வலுக்கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்துக் கொள்வதை லவ் ஜிகாத் எனக் கூறுகின்றனர்.  பாஜக ஆளும் பல மாநிலங்களில் இந்த லவ் ஜிகாத் தடை சட்டம் இயற்ற வேண்டும் எனத் தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற அவையில் பேசிய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, “தற்போதுள்ள சட்டத்தில் லவ் ஜிகாத் என்றால் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.  மேலும் இந்த லவ் ஜிகாத் சம்பந்தமாக எந்த ஒரு வழக்கும் பதியப்படவில்லை.  எனவே அப்படி ஒரு சொல்லை முதல் முறையாக இந்த அரசு ரத்து செய்கிறது.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி தனது தேர்தல் பிரசாரங்களில் லவ் ஜிகாத் தடை சட்டம் இயற்ற வேண்டும் என உரையாற்றினார்.  நேற்று நடந்த கர்நாடகா மாநில பாஜக செயற்குழு கூட்டத்திலும் இது குறித்துப் பேசப்பட்டுள்ளது.   மற்ற மாநிலங்கள் முடிவுக்குக் காத்திருக்காமல் கர்நாடகாவில் லவ் ஜிகாத் தடை சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சி டி ரவி மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் இத்தகைய சட்டம் இயற்றுவதை வரவேற்பதாக கூறி உள்ளனர்.