கர்நாடக இடைத்தேர்தல்: கண்ணீர் சிந்தி வாக்கு சேகரிக்கும் முதல்வர் குமாரசாமி

மைசூர்:

ர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த முதல்வர் குமாரசாமி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். இது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே  நான் முதல்வராக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை அல்ல. முட்கள் நிறைந்த படுக்கையாகும் என்று கூறி கண்ணீர் வடித்த நிலையில், தற்போது தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

மைசூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் குமாரசாமி,  ‘‘நான் கடவுள் அருளால் முதல்-மந்திரி ஆகி இருக்கிறேன். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக சிலர் எனது நிர்வாகம் மீது வீணாக பழி சுமத்தி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட உள்ளன. மாண்டியா மாவட்டத்தில் உள்ள 10 லட்சம் விவசாயிகளுக்கு வருகிற நவம்பரில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. ஏற்கனவே எனது அரசால் மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.60 கோடி ரத்தும் விரைவில் செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய குமாரசாமி, எனது பட்ஜெட்டை ‘மாண்டியா பட்ஜெட்’ என பா.ஜனதா தலைவர்கள்  கிண்டல் செய்து வருகின்றனர் என்று பேசிக் கொண்டிருந்த போது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட அவர் கண்ணீர் விட்டு அழுதார். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்காக உழைப்பேன் என்று உறுதி அளித்தார்.

ஆனால், எதிர்க்கட்சியான பாஜகவோ, குமாரசாமியின் கண்ணீர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தொல்லை காரணமாகவே குமாரசாமி கண்ணீர் விட்டு அழுகிறார் என்றும், மக்களிடையே தன்மீதான பரிதாபத்தை உருவாக்கி வெற்றிபெற முயற்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

ஏற்கனவே கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்ணீர் சிந்தியை, பாஜக, குமாரசாமி, இன கண்ணீர் சாமி என கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.