கர்நாடகா இடைத்தேர்தலில் இடி விழுந்தது!! பாஜ கனவு தவிடுபொடி

பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ தோல்வி அடைந்ததன் மூலம் 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அக்கட்சி போட்டுவைத்திருந்த கணக்கு தவிடுபொடியானது.

கடந்த 9ம் தேதிக்கு முன் கர்நாடகா மாநிலத்தில் நஞ்சுன்குட் மற்றும் குண்டுலுபேட் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று பாஜ கொக்கரித்து வந்தது. ஆனால் கடந்த 13ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருந்தது. நஞ்சுன்குட் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், குண்டுலுபேட் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

தேர்தலுக்கு முன்பு மூன்று வாரங்கள் பாஜ தலைவர் எடியூரப்பா இந்த இரு தொகுதிகளிலும் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னனோட்டமாக இந்த இரு தொகுதிகளையும் கைப்பற்ற பாஜ முயற்சி செய்தது. சித்தாராமையா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலித் தலைவரான சீனிவாச பிரசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி, பாஜ சார்பில் நஞ்சுன்குட் தொகுதியில் போட்டியிட்டார்.

இவரை வெற்றி பெறச் செய்ய எடியூரப்பா தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார். சீனிவாச பிரசாத்தின் தனிப்பட்ட காரணத்தினால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முழுவதும் தன்னை பற்றியே சீனிவாச பிரசாத் தம்பட்டம் அடித்தார். ஆனால் இதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த இரு தொகுதகளிலும் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.

கடந்த 2013ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சீனிவாச பிரசாத் 50,784 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதா பக்ஷா காட்சி வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் பெற்றார். சீனிவாச பிரசாத்தின் சொந்த செல்வாக்கு உள்ளிட்ட பல அம்சங்களை கணக்கிட்டு 8,900 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்று பான கணக்கு போட்டு வைத்திருந்தது.

சீனிவாச பிரசாத்துக்கு கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகள் அனைத்தும் அவரது சொந்த செல்வாக்கு காரணமாக கிடைத்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு எதுவும் இல்லை என்று பாஜ தப்பு கணக்கு போட்டிருந்தது.

அப்போது பிற்படுத்த சமுதாய வாக்குகளை சித்தாராமையா, சீனிவாச பிரசாத்திற்கு பெற்று தந்தார். இதனாலேயே அவரது வெற்றி எளிதானது. இந்த தொகுதியில் குறிப்பிட்ட அளவில் தலித் வாக்குகள் உள்ளன. லிங்காயத் மக்களும் அதிகம் உள்ளனர். இதுவும் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று பாஜ திட்டமிட்டது. கணக்குப்படி பார்த்தால் இந்த இரு இனத்தவர்கள் வாக்குகளை பெற்று சீனிவாச பிரசாத் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இதில் லிங்காயத் மக்கள் இவரை ஆதரிக்கவில்லை. லிங்காயத் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் குண்டுல்பேட் தொகுதியில் முதல்வர் சித்தாராமையா அதிக கவனம் செலுத்தினார். இந்த தொகுதியில் மகாதேவ் பிரசாத் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வெற்றி பெற்றிருந்தார். அவரது அனுதாப அலையில் கீதா மகாதேவ் பிரசாத் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

பிரச்சாரத்தின் போது மைசூர் எம்பி பிரதாப் சிம்கா கீதா மீது அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டார். சாம்ராஜ் நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அவர் பேசுகையில்,‘‘ கீதா அவரது கணவர் அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் அனைத்து அதிகார சுகங்களையும் அனுபவித்தார். அவரது இறுதி சடங்குக்கு பின் உடனடியாக அரசியலில் கீதா குதித்தார்’’ என்றார்.

அவரது அவதூறு பேச்சுக்கு சிம்கா பின்னர் மன்னிப்பு கோரினார். ஆனால் அது தேர்தலில் எடுபடவில்லை. லிங்காயாத் சமுதாய மக்கள் ஆதரவின்றி பாஜ 2018ம் ஆண்டில் விதான் சவுதாக்குள் நுழைய முடியாது. இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பாஜ வாய்ப்பளிக்கவில்லை. சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த எஸ்எம் கிருஷ்ணாவும் ஆதிக்கம் மிகுந்த வொக்காலிகா சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நஞ்சுண்குண்ட் தொகுதியில் பாஜ வெற்றி பெற எஸ்எம் கிருஷ்ணா உதவி புரியவில்லை. அதனால் கிருஷ்ணா புராணமும் பாஜவுக்கு எதிர்காலத்தில் கைகொடுக்காது. இந்த இரு தொகுதிகளின் வெற்றி சித்தாராமையாவுக்கு கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை பெற்று தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இரண்டில் ஒரு தொகுதியிலாவது பாஜ வெற்றி பெற்றிருந்தால் எடியுரப்பாவின் வளர்ச்சிக்கு உதவியிருக்கும். 2013ம் ஆண்டு தோல்வியை பாஜவுக்கு மீண்டும் இத்தேர்தல் நினைவுபடுத்தியுள்ளது. எடியூரப்பாவின் தலைமை பாஜவுக்கு உதவிபுரியாது என்பதையே இத்தேர்தல் சுட்டிகாட்டியுள்ளது.

கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 150 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற அமித்ஷாவின் கனவை இந்த இடைத்தேர்தல் தவிடுபொடியாக்கியுள்ளது. அதிக நம்பிக்கையுடன் பாஜ மேலும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த இடைத்தேர்தல் சுட்டிகாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.