அந்த 5 மாநிலங்கள் – நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட கர்நாடகம்!

பெங்களூரு: தமிழகம், மராட்டியம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதியில்லை என்று கூறிய கர்நாடகம், தற்போது விமானங்களின் எண்ணிக்கை குறைப்புதான் நோக்கம் என்று மாற்றி அறிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு, மராட்டியம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதியில்லை என்று கூறியிருந்தது கர்நாடகம். இந்த அறிவிப்பு பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது தன் நிலையை மாற்றியுள்ளது அம்மாநிலம்.

குறிப்பிட்ட மாநிலங்களிலிருந்து வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென்பதே தனது கோரிக்கை என்று கூறியுள்ளது அம்மாநிலம். மேலும், தங்களிடம் போதிய தனிமைப்படுத்தும் இடவசதிகள் இல்லாத காரணத்தால், இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், குஜராத், மராட்டியம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து சாலை வழியாக நுழைவோர், கர்நாடகாவிற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகத்திலிருந்து மேற்கண்ட மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவோர் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.