பெங்களூரு:

கர்நாடக சட்டபேரவையில் இன்று எடியூரப்பா அரசுமீதான நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துவிட்ட நிலையில், எடியூரப்பா வெற்றி பெறுவது எளிதானது,

ர்நாடக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த, காங்கிரஸ், ஜேடிஎஸ், சுயேச்சை என  மொத்தம் 17 எம்எல்ஏக்களை கட்சித்தாவல் தடைச் சட்டப்படி, சபாநாயகர் ரமேஷ்குமார்  தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், புதிய முதல்வராக கடந்த 26ந்தேதி பதவி ஏற்றார். அதையடுத்து, 31ந்தேதிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டருந்தார்.

இந்த நிலையில், இன்று எடியூரப்பாக கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். இதில், காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசும்போது, இது அரசியலமைப்புக்கு எதிரான அரசு. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஒழுங்கற்ற அரசு அமைக்கப்பட்டுள்ளது என்று கடுமையாக சாடினார்.

இதைத் தொடர்ந்து  குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக 106 பேர் ஆதரவளித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.