Random image

கர்நாடகா அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி….எதிர்ப்பையும் மீறி குமாரசாமி முடிவு

பெங்களூரு:

கர்நாடகா அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம் செய்யப்படும் என்று முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

இது குறித்த குமாரசாமி கூறுகையில்,‘‘ஆங்கில வழிக் கல்வி முறையை நான் பட்ஜெட்டில் அறிவித்த போது சிலர் இதை வழக்கம் போல் எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பு அர்த்தமற்றது. நடைமுறைக்கு சாத்திமற்றது. கன்னட மொழி பாதுகாவலராக சுய நியமனம் செய்து கொண்டவர்கள் என்னை நேரில் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், நான் அவர்களை புறக்கணிக்க முடிவு செய்தேன்.

கிராமப் புற ஏழை மக்கள் ஆங்கில அறிவைட பெற வேண்டும் என்பதற்காக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. அவர்களுக்கும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் 90 சதவீத குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வியில் பயில்கின்றனர். அவர்கள் பற்றி நான் கவலை அடையவில்லை’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் சமயங்களில் எனக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. அதில் இலக்கண பிழை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படும். எனக்கே இந்த மன நிலைய என்றால்? கிராமப்புறம் மற்றும் நகர்புற குழந்தைகளின் நிலை எப்படி இருக்கும்?, நாம் சந்திக்கும் பிரச்னையை அவர்களும் சந்திக்க நேரிடும்.

இது தான் எனது உண்மையான கவலை. டில்லியை முன்மாதிரியாக கொண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயிறசிக்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் தான் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட முடியும். இது போன்ற பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு எதிர்கட்சியான பாஜக.வும், கூட்டணி கட்சியான காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.