காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு

டில்லி:

ர்நாடகா முதல்வர் இன்று மாலை பிரதமரை சந்திக்க டில்லி சென்றுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ள மதசார்பற்ற கட்சி தலைவர் முதல்வர் குமாரசாமி, ஏற்கனவே அமைச்சரவை பதவி ஏற்கும்முன்  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தியை சந்தித்த நிலையில், தற்போது இன்று மீண்டும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

கடந்த மே மாதம்  நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலை யில், காங்கிரஸ் ஆதரவுடன் ஜேடிஎஸ் ஆட்சி அமைத்தது.  மே மாதம் 23ந்தேதி கர்நாடக முதல்வராக குமாரசாமியும்,  துணை முதல்வராக  கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு (பைல் படம்)

அதைத்தொடர்ந்து அமைச்சரவை அமைக்கும் பணியில் இரு கட்சிகளுக்கு இழுபறி நீடித்து வந்தது. தொடர்ந்து இரு கட்சிகளுக்கு இடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில்  சுமூகமான உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை இறுதியானது.

கடந்த 6ந்தேதி  25 பேர் கொண்ட கர்நாடக  புதிய அமைச்சரவை  பதவி ஏற்றது.  புதிய அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு 15 இடங்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 9 இடங்களும், பிஎஸ்பி கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டது.  அமைச்சர்களுக்கு கவர்னர் வஜுபால் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த  நிலையில், இன்று  காங்., தலைவர் ராகுல் காந்தியை  டில்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக அரசியல் மற்றும் அமைச்சரவை குறித்து ராகுல்காந்தியுடன் முதல்வர் குமாரசாமி விவாதித்த தாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை கர்நாடக முதல்வர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று மாலை 4.30 மணி அளவில் பிரதமர் மோடியை குமாரசாமி சந்திக்க இருக்கிறார். அப்போது  காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுப்பது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.