Random image

கர்நாடகா : 11 நாட்களில் கொலை வழக்கை முடித்து தீர்ப்பளித்த நீதிபதி

சித்திரதுர்கா

சித்திரதுர்கா நீதிமன்ற நீதிபதி வாஸ்திரமத் என்பவர் ஒரு கொலை வழக்கு விசாரணையை 11 நாட்களில் முடித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

பொதுவாக நீதிமன்றம் செல்லும் அனைத்து வழக்குகளுமே வெகு நாட்கள் நடப்பதாக அனைவரும் கூறுகின்றனர்.   அதற்கேற்றார்போல் பல வழக்குகள் வருடக்கணக்கில் நீள்கின்றன.   “தாமதிக்கப்பட்ட நீதி என்பது தர மறுக்கப்பட்ட நீதி” என்பது ஒரு ஆங்கில பழமொழி ஆகும். (JUSTICE DELAYED IS JUSTICE DENIED).

கர்நாடக மாநிலம் வலசா கிராமத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வர சாமி.   சுமார் 75 வயதான இவர் தனது 63 வயது மனைவி புட்டம்மா என்பவருடன் வசித்து வந்தார்.  இந்த வயதிலும் இவருக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது.    அதனால் இருவருக்கும் இடையில் பல வருடங்களாக தகராறு இருந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடந்த சண்டையில் மிகவும் கோபமைடைந்த பரமேஸ்வர சாமி தனது மனைவியை ஒரு பாறாங்கல்லை தலையில் தூக்கிப் போட்டு கொன்றுள்ளார்.  அத்துடன்  அவர் உடலையும் அதே கல்லைக் கொண்டு சிதைத்துள்ளார்.   இதைத் தொடர்ந்து புட்டம்மாவின் அண்ணன் நாகபூஷன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

பரமேஸ்வர சாமியை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது சித்திரதுர்கா நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தனர்.   இந்த வழக்கை இந்த மாதம் மூன்றாம் தேதியில் இருந்து ஐந்தாம் தேதிவரை நீதிபதி வாஸ்திரமத் விசாரணை நடத்தினார்.   அப்போது காவல்துறை மற்றும் எதிர்த்தரப்பு ஆகிய இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.  குற்றவாளியின் மகனே தந்தைக்கு எதிராக சாட்சி சொல்லி இருந்தார்.

நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.  குற்றம் சாட்டப்பட்ட பரமேஸ்வர சாமியை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 5000 அபராதமும் விதித்துள்ளார்.    நீதிமன்ற வரலாற்றில் இவ்வாறு 11 நாட்களில் வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பளிப்பது அதிசயமான ஒன்றாகும்.