நித்யானந்தா எங்கே ? : கைது செய்ய தேடும் காவல்துறை

பிடதி

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்யானந்தாவை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கைது செய்ய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெங்களூருவுக்கு அருகில் உள்ள பிடதியில் சாமியார் நித்யானந்தா ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார்.    இந்த ஆசிரமத்தில் பாலியல் முறைகேடுகள் நடப்பதாக வீடியோ ஒன்றை ஒரு தமிழ்த் தொலைக்காட்சி வெளியிட்டது பரபரப்பானது.   அத்துடன் நித்யானந்தா அங்குள்ளபெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் லெனின் கருப்பன் என்பவர் புகார் அளித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு அளிக்கபட்ட இந்த புகாரின் பேரில் ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.    இந்த மாதம் 6ஆம் தேதி நடந்த விசாரணிக்கு நித்யானந்தா வரவில்லை.  இந்த வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளபோது வேண்டுமென்றே அலட்சியம் காட்டி வருவதாக நீதிபதி தெரிவித்தார்.  நித்யானந்தாவை ஜாமின் வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்தார்.

அந்த உத்தரவை அறிந்த சாமியார் நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை கர்நாடக சிஐடி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   அவரைத் தேடி நேற்று பிடதியில் நடந்த சோதனையில் அவர் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது.   அவருடைய மற்ற ஆசிரமங்களிலும் காவல்துறையினர் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.

வரும் 14 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.   அன்றைய தினம் அவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத ஆசிரம பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.