பெங்களூரு: கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, எல்லைகளை மூடி உள்ளதோடு கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடகா கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

கேரளாவில் தொடக்கத்தில் குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றும் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாட்டை கர்நாடக மாநிலம் விதித்து உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் உள்ளவர்கள் மட்டும் எல்லையில் நுழைய அனுமதி தரப்பட்டு உள்ளது. ஆகையால் எல்லைகளில்  நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன.

இன்று முதல் 4 எல்லைகளுக்கும் சீல் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: எல்லையில் நுழைய விரும்புவோர் குறைந்தபட்சம் 72 மணி நேரம் முன்பாக எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை நெகட்டிவ் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று கூறி உள்ளனர்.