பெங்களூரு:

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன்  கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி நாளை பதவி ஏற்க உள்ளார். நாளை  மாலை 4.30 மணிக்கு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவுக்கு பாரதியஜனதாவுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்கள் கர்நாடகத்தில் சங்கமிக்க உள்ளனர். இதற்கான அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு குமாரசாமி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு விதான் சௌதாவில் நாளை  நடக்கும் பதவி ஏற்கும்  விழாவில், குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

இந்த பதவி ஏற்பு விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  சோனியா காந்தி கலந்து கொள்கின்றனர். மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டில்லி முதல்வர் கேஜரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாரதியஜனதாவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வரும் சூழலில் நாளைய  விழாவில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கர்நாடகாவில் சங்கமித்து தங்களது ஒற்றுமையை பாரதியஜனதாவுக்கு பறைசாற்றுகிறார்கள்.