பெங்களூரு

ர்நாடகாவில் கொரோனா பரவுதல் அதிகரித்து வருவதால் வாரத்துக்கு இரு நாட்கள் ஊரடங்கு அறிவிக்க முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தி உள்ளார்.

 

கடந்த 10 நாட்களாகக் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது.  இம்மாநிலத்தில் 28,877 பேர் பாதிக்கப்பட்டு 471 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11878  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்  தற்போது பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 16,524 ஆக உள்ளது.

இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி தினம் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.  அத்துடன் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அனுசரிக்கப்படுகிறது.   ஆயினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை.

இதையொட்டி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.  இந்த கூட்டத்தில் துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் மற்றும் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.   அப்போது கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அப்போது முதல்வர் எடியூரப்பா கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமையுடன் சனிக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிப்பது குறித்து அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.  இன்று அவர்கள் கூறும் கருத்துக்கிணங்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு வாரத்துக்குச் சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்கள் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.