பெங்களூரு

க்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதில் இருந்து அக்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.    மாநில காங்கிரஸ்  தலைவராக முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளார்.   காங்கிரஸ்  கட்சியினரில் சிலர் முன்னாள் முதல்வர் சித்தராமையா மீண்டும் முதல்வராக வேண்டும் எனம் கோரிக்கை விடுத்தனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி தோல்வி அடைந்துள்ளது.

இந்த தேர்தல் தோல்விக்கு சித்தராமையா பொறுப்பு என மஜத கட்சியினர் கூறி வருகையில் அதே கருத்தை பல காங்கிரசாரும் கூறி வருகின்ரனர்.   மாநில காங்கிரஸ் மூத்த பிரமுகர்கள் யாருக்கும் அவர் முன்னுரிமை அளிக்கவில்லை என ரோஷன் பைக், ராமலிங்க ர்ட்டி மற்றும் எச் கே பாடில் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.   மேலும் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

அரசியல் ஆர்வலரான மகாதேவ் பிரகாஷ்,  ”சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த சித்தராமையா மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரையும் பின் தள்ளி முதல்வராக பதவி ஏற்றார்.  அது மட்டுமின்றி காங்கிரசில் தாம் மட்டுமே ஒரே பெரிய தலைவர் என்னும் எண்ணத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.   இது பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்களும் அவர் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா வாக்குகளை கட்சிக்கு கொண்டு வருவார் என எண்ணியே அவரை சகித்துக் கொண்டிருந்தனர்.   தற்போது அவரால் இந்த வாக்குகளை கட்சிக்கு கொண்டு வர முடியவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சித்தராமையா மோடியின் மீது நேரடியாக தாக்கி மட்டரகமாக பேசியதாகவும் அது பல காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.  அதனால் மக்களவை தேர்தலின் போது இவருடைய பிடிவாதம் மற்றும் தன்னிச்சையான பேச்சுக்கள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக பல கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையாவின் போக்கால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவருடைய  நடவடிககைகளால் கூட்டணி அரசு கவிழலாம் எனவும் மஜத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.  முன்னாள் அமைச்சர் ஒருவர் சித்தராமையா ஒரு பொறுப்புள்ள தலைவராக நடந்துக் கொள்வதில்லை எனவும்  காங்கிரஸ் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.