ராய்ப்பூர்:

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள ஒவ்வொரு ஜனநாயக அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ், பாஜக கைப்பற்றி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து மூத்த நீதிபதிகள் பேட்டி அளித்தனர்.

நீதித்துறை அச்சத்தில் உள்ளது. பத்திரிக்கைகளும் அச்சத்தில் உள்ளன. அதேபோல் பிரதமர் மோடி முன்பு ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் பாஜக எம்.பி.க்களும் அச்சத்தில் உள்ளனர். நாட்டின் அரசியலமைப்பு மீது பலமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் எம்எல்ஏ.க்கள் அனைவரும் ஒரு பக்கம் உள்ளனர். ஆனால் கவர்னர் மற்றொரு பக்கம் உள்ளார். எம்.பி., எம்எல்ஏ.,க்கள், பத்திரிக்கை, திட்ட கமிஷன் என ஒவ்வொன்றிலும் ஆர்எஸ்எஸ் தனது ஆட்களை திணித்து வருகிறது’’ என்றார்.

கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு முதல்வராக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை தொடர்ந்து ராகுல்காந்தி இவ்வாறு பேசியுள்ளார். பின்னர் இது தொடர்பாக டுவிட்டரிலும் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்…

‘‘பா.ஜ.க.வின் பகுத்தறிவற்ற செயலால், போதிய பெரும்பான்மை எண்ணிக்கை இல்லாத போதிலும் கர்நாடகாவில் ஆட்சி அமைத்து, அரசியலமைப்பை கேலிக் கூத்தாக்கி உள்ளது. இந்த காலைப் பொழுதில் வெற்று வெற்றியை பா.ஜ., கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் தோற்றகடிக்கப்பட்டதற்காக இந்தியா வருந்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.