பெங்களூரு:

கர்நாடக மாநில டி.ஐ.ஜி. ரூபாவுக்கு அம்மாநில அரசு ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்ததாகவும் இதற்காக டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு புகார் கூறினார்.

இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரூபா பெங்களூரு நகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கர்நாடக மாநில அரசு டி.ஐ.ஜி ரூபாவுக்கு 2016ம் ஆண்டுக்கான ஜனாதிபதி விருது வழங்கி கவுரவித்துள்ளது. பெங்களூர் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் ரூபாவிற்கு ஜனாதிபதி விருதை கவர்னர் ராஜூபாய் ரூதாபாய் வாலா வழங்கினார்.

இவ்விழாவில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கர்நாடக மாநில காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.