யானையால் கொல்லப்பட்டவர் உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் : ஈமச்சடங்கு செய்த போலீஸ்

--

சாம்ராஜ்நகர்

யானையால் கொல்லப்பட்ட 44 வயது மனநிலை பிறழ்ந்தவர் உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்ததால் கர்நாடக காவல்துறையினர் ஈமச்சடங்கு செய்துள்ளனர்.

மைசூர் அருகே உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டமும் அவை மனிதரைத் தாக்குவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு  நான்கு நாட்கள் முன்பு  ஒரு மனநிலை பிறழ்ந்தவரை ஒரு யானை கொன்றுள்ளது   அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினர் எடுத்துச் செல்ல மறுத்துள்ளனர்.  அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அவர்கள் அஞ்சினார்கள்.

கர்நாடக காவல்துறையினர் இறந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தியும் அவர்கள் உடலை எடுத்துச் செல்லவில்லை.  இதையொட்டி காவலர் மூவர் இணைந்து இறந்தவரின் ஈமச் சடங்குகளை செய்துள்ளனர்.   துணை உதவி ஆய்வாளர் மாதேகவுடா மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் அந்த உடலை கவுரவமாக அடக்கம் செய்துள்ளனர்.

சாம்ராஜ்நகர் இந்து கல்லறையில் அவருக்கு ஈமச் சடங்கு நடந்துள்ளது.  ஆனால்  ஊரடங்கு காரணமாகப் புரோகிதர் வரவில்லை.  மாதேகவுடா ஒரு ஜேசிபி மூலம் குழியைத் தோண்டி உள்ளார். அத்துடன் அவர் ஒரு வெள்ளை துணையை வாங்கி உடலுக்கு போர்த்தி உள்ளார்.  மற்ற இரு காவலர்கள் உதவியுடன் இறந்தவரை புதைத்து அந்த இடத்தில் ஊதுபத்திகள் ஏற்றி மூவரும் வணங்கி உள்ளனர்.