பெங்களூரு:

ர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுத்தப் பிறகுதான், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,  நாளை திட்டமிட்டப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெறும் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்து காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம்  கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்சி கவிழும் சூழல் உருவான நிலையில், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதி மன்றம் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித் திருந்த நிலையில், சபாநாயகர், எம்எல்ஏக்கள்   ராஜினாமா கடிதம் குறித்து, உரிய  முடிவு அறிவித்த பிறகே, அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறியிருந்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், உச்சநீதி மன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். மதிக்கிறேன் என்றவர், உச்சநீதி மன்றம்  கூறியுள்ளபடி செயல்படுவேன் என்றார்.

மேலும்,  அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது உடனடியாக எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்றவர், நிச்சயமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக எனது முடிவுகள் இருக்காது; உச்சநீதி மன்ற உத்தரவு காரணமாக எனக்கு கூடுதல் பொறுப்பும், சுமையும் ஏற்பட்டு இருப்பதாகவும்,  இந்த வி‌ஷயத்தில் அரசியல் அமைப்பின் சட்டபிரிவுகள், உச்சநீதி மன்றத்தின்  உத்தரவு மற்றும் லோக்பால் அமைப்பின் சட்ட பிரிவுகள் எனக்கு வழிகாட்டிகளாக உள்ளன. அவற்றின் அடிப்படையில் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே நான் முடிவுகள் எடுப்பேன் என்றார்.

எம்.எல்.ஏ.க்கள் மீது முடிவு எடுப்பதற்கு எனக்கு யாரும் உத்தரவிட முடியாது என்று கூறியவர்,  எனக்கு அதற்கு கால அவகாசம் உள்ளது. எனவே எனது மனசாட்சிபடி செயல்படுவேன்.  ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை சட்டமன்றத்தில் குமாரசாமி ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகள் தொடங்கும்.

இவ்வாறு சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.