இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா: கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூரு: இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் கல்புர்கி பகுதியில் இந்தியாவின் முதல் கொரோனா பலி பதிவானது. 76 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந் நிலையில் அந்த முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்புர்கியை சேர்ந்த 60 வயது மருத்துவர் கொரோனா வைரசுக்கு பரிசோதனை செய்திருப்பதாக கர்நாடகா சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

76 முதியவர் சிகிச்சை அளிக்கும் போது அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது பரிசோதனைகளில் தெரியவில்லை. ஆகையால் மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், அந்த மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் இருந்து கர்நாடகா வந்த மாணவி ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் அறிகுறிகள் தென்பட்ட போது அவள் வீட்டில் தனிமையில் இருந்தாள். அவரது மாமா ஒரு அரசுத் துறையில் பணிபுரியும் ஒரு மருத்துவர்.

இந்த கொரோனா அறிகுறிகளுக்கு பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு வைரஸ் பாதித்திருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இதன்மூலம் கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து இருக்கிறது.

கர்நாடகா முழுவதும் உள்ள பப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.