சுங்கச்சாவடியில் காருக்கு ரூ. 4 லட்சம் கட்டண வசூல்

மங்களூரு:

கொச்சி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உடுப்பியில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் ஒரு சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியை மைசூரை சேர்ந்த டாக்டர் ராவ் என்பவர் கடந்த 12ம் தேதி இரவு 10.30 மணிக்கு கடந்து செல்வதற்காக காரில் வந்தார்.

அப்போது சுங்க சாவடி கட்டணத்துக்காக தனது டெபிட் கார்டை பணம் வசூலிக்கும் ஊழியரிடம் கொடுத்தார். ரூ. 40 தான் கட்டணம். ஆனால், ரூ. 4 லட்சம் தங்களது கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்டது என்று அவரது போனுக்கு மெசேஜ் வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த டாக்டர் இது குறித்து சுங்கச்சாவடி ஊழியரிடம் தெரிவித்தார்.

அவர்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர். இதையடுத்து அங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள கோடா காவல்நிலையத்துக்கு சென்று நள்ளிரவு 1 மணிக்கு டாக்டர் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் இருந்து தலைமை காவலர் ஒருவர் சுங்கச்சாவடிக்கு வந்தார். இறுதியாக சுங்கச்சாவடி ஊழியர் தவறுதலாக ரூ. 4 லட்சம் வசூலித்ததை ஒப்புக் கொண்டனர்.

நிர்வாகிகள் கூடுதலாக வசூலித்த பணத்தை காசோலையாக வழங்க முன் வந்தனர். ஆனால், மொத்த பணமும் ரொக்கமாக வேண்டும் என்று டாக்டர் வலியுறுத்தினார். இதன் பின்னர் சுங்க்சாவடி ஊழியர்கள் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு 3 லட்சத்து 99 ஆயிரத்து 960 ரூபாய்யை ரொக்கமாக அதிகாலை 4 மணிக்கு வழங்கினர். வழக்கமாக அந்த சுங்கச்சாவடியில் தினமும் ரூ. 8 லட்சம் வரை வசூலாகும். அதனால் ரொக்கம் கொடுப்பது சாத்தியமானது என்று போலீசார் தெரிவித்தனர்.