கர்நாடகா வெள்ளம்: மத்திய அரசிடம் ரூ.1,118 கோடி நிதியுதவி கோரினார் குமாரசாமி

டில்லி:

கர்நாடகாவில் சமீபத்தில் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் 7 மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இப்பகுதியை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கு பணியை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்தார். பாதித்த பகுதிகளை சீர்செய்ய ஆயிரத்து 118 கோடி ரூபாய் மத்திய அரசு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்திப்பு முடிந்த பிறகு குமாரசாமி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ முதற்கட்ட ஆய்வில் 3,435.80 கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இது இடைக்கால ஆய்வில் கணக்கிடப்பட்ட தொகை என்றும், ஆய்வு முழுமையடைந்த பிறகு முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’’என்றார்.

கர்நாடகா அமைச்சர்கள் பரமேஸ்வரா, தேஸ்பாண்டே, பண்டேப்பா காஷெம்புர் ஆகியோர் உடன் இருந்தனர்.
‘‘முதற்கட்ட நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும். மத்திய ஆய்வுக்குழு சேதங்களை ஆய்வு செய்ய விரைவில் அனுப்பப்படும்’’ என ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.