டெல்லி : கர்நாடகா முன்னாள் ஆளுநர், முன்னாள் சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

சிறுநீரக பாதிப்பால் சாகேத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் நிகம்பூத் காட் பகுதியில் நாளை எரியூட்டப்படும் என்று அவரது மகன் அருண் பரத்வாஜ் கூறி உள்ளார். அரியானா மாநிலம் ரோதக் பகுதியில் பிறந்த ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் முக்கியமானவர்.

1982ம் ஆண்டு மாநிலங்களவைக்கு முதன்முறையாக எம்பியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பின்னர் 5 முறை எம்பியாக இருந்தார். ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர்.

2004ம் ஆண்டு முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தார். பிறகு கர்நாடக ஆளுநராக 2009 முதல், 2014 வரை பணியாற்றினார். கேரளாவின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளார்.