பெங்களூரு :

ர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு பாஜகதான் காரணம் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார். கர்நாடக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக  அங்கு காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ என மொத்தம் 14 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ள  நிலையில், அவர்களுக்கு பதவி வழங்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில்  கூட்டணி அரசை காப்பாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், பெங்களூருவில் முகாமிட்டு ஆட்சியை தக்க வைப்பது பற்றி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்றும், கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா வீட்டில் ஆலோசனை நடைபெற்ற  நிலையில், இன்று காலை 10 மணி முதல் மீண்டும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதில், காங்கிரஸ்  மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் கர்நாடக முதல்வர் துணை முதல்வர் சித்த ராமையா, கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், முதல்வர் குமாரசாமி,  ஜேடிஎஸ் தலைவர் தேவகவுடா உள்பட அமைச்சர்களும்  கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்களின்  ராஜினாமா கடிதங்கள் சித்தராமைவிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, பாரதிய ஜனதா கட்சி  கடந்த 5 ஆண்டு களாக ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டியவர், காங்கிரஸ் உள்பட மாற்றுக்கட்சி  எம்.எல்.ஏ.க்களை இழுத்து, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும்  மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று கூறினார்.

மாநில பாரதியஜனதா கட்சி நிர்வாகிகள், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக மும்பைக்கு அழைத்துச் சென்று ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு களங்கம் ஏற்படாது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் பா.ஜனதாவுக்கு தான் கெட்ட பெயர் உண்டாகும். எங்கள் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக ஏற்கனவே  5 முறை  முயற்சி செய்துள்ளனர்.ஆனால், அவை அனைத்தும் தோல்வியே. தற்போது 6வது முறையாக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இதுவும் அவர்களுக்கு தோல்வியையே கொடுக்கும். மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததில் பா.ஜனதாவுக்கு நேரடி தொடர்பு உள்ளது. அந்த எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல சிறப்பு விமானத்தை பா.ஜனதா தான் ஏற்பாடு செய்தது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தொடர்ந்து பேசிய மந்திரி டி.கே.சிவக்குமார்,  மந்திரி நாகேசை பா.ஜனதாவினர் மும்பைக்கு கடத்தி சென்றுவிட்டனர் என்றும், மும்பையில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் துப்பாக்கி முனையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார். ஆட்சி அதிகாரத்துக்காக பா.ஜனதா எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியவர்,  ஜனநாயக முறைப்படி பா.ஜனதாவினர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் கொடுத்து ராஜினாமா செய்ய வைப்பது சரியில்லை. அவ்வாறு செய்தாலும் கூட அதை பா.ஜனதா ஏற்றுக்கொள்ள மறுத்து மோசமான அரசியலை செய்கிறது.

இவ்வாறு அமைச்சர்  சிவகுமார் அவர் கூறினார்.