அயோத்தி நில வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக நிழுவையில் இருந்து அயோத்தி நில விவகாரத்தில், நாளை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. நிலத்தை சரிபாதியாக பிரித்துக்கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. 40 நாட்களாக தொடர்ந்து விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பை வெளியிட உள்ளது. அயோத்தி வழக்கின் தீர்ப்பால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு மாநில அரசுகளும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நாளை ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில அரசு, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.