காங்.-ஜேடிஎஸ் தலைவர்களை சந்திக்க கர்நாடக கவர்னர் மறுப்பு…. பரபரப்பு

பெங்களூரு:

ர்நாடக தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்னும் முற்றுபெறாத நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், அவர்களை சந்திக்க கவர்னர்வாஜுபாய் வாலா  (Vajubhai Rudabhai Vala) மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

வாக்கு எண்ணிக்கை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், தொடக்கத்தில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வந்த பாஜக, தற்போது படிப்படியாக குறைந்த 106 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இது மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் பாஜ ஆட்சியை அமையவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சி அதிதீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது 77 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ், 44 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி சேர பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த இரு கட்சிகளும் சேர்ந்து 120க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸும் மஜதவும் இணைந்தால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்பதால் இரு கட்சி தலைவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.  இதை ஆசாத், சித்தராமையா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய குலாம் நபி ஆசாத், மஜத தலைவர் தேவெ கௌடா மற்றும் குமாரசாமி ஆகியோருடன் தொலைபேசியில் பேசியே கூட்டணியை உறுதி செய்துவிட்டோம். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மஜத ஆட்சியமைக்கும் என தெரிவித்திருந்தார். ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமியை முதல்வராக முன்னிலைப்படுத்த இரு கட்சியினரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கர்நாடக மாநில கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க இரு கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களை சந்திக்க கர்நாடக மாநில கவர்னர்  வாஜுபாய்  ருதபாய் பாலா (Vajubhai Rudabhai Vala) மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி