பெங்களூரு:

ர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான  அரசியல்  சூழ்நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 பேர் தேவைப்படும் நிலையில், 104 பேர் ஆதரவு மட்டுமே உள்ள பாரதிய ஜனதா கட்சியை கர்வர்ன வஜுராவாலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சியினருக்கு 116 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கின்றனர்.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 16ந்தேதி நள்ளிரவு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது, கவர்னர் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதி மன்றம் தடைவிதித்து வழக்கை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், கர்நாடக முதல்வராக  எடியூரப்பா வுக்கு  கவர்னர் பதவி பிரமாணமும் செய்து வைத்து, பெரும்பான்மை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் கொடுத்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற காரசார விவாதத்தை தொடர்ந்து எடியூரப்பா நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா நாளை 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்றும், நாளை சட்டசபையை கூட்டத் தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடுவதாக கவர்னர் அறிவித்து உள்ளார்.

இதன் காரணமாக தற்போது ஐதராபாத்தில் தங்கி உள்ள காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக கர்நாடக திரும்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

நாளை சட்டமன்ற கூட்டத்தில் பாஜ, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பெரும்பான்மைக்கு ஆதரவு கோரி முதல்வர் எடியூரப்பா சபையில் உரையாற்றுவார். அதைத்தொடர்ந்தே பெரும்பான்மை குறித்து ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

இந்த ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெறுவாரா அல்லது முகத்தில் கரியை பூசிக்கொள்ளப்போவது எந்த கட்சியினர் என்பது தெரிய வரும்.

எடியூரப்பா வெற்றி பெற்றால், குதிரை பேரம் திரைமறைவில் நடைபெற்றிருப்பதும் உறுதியாகும்.

இதற்கிடையில்  தற்காலிக சபாநாயகராக தேஸ்பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  8 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.