பெங்களூரு: மத்திய அரசின் நான்காவது கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சலூன் கடைகளில் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் (இயக்க நடைமுறை) குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் துறையின் சார்பாக விரிவான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவை குறித்த விபரம்:
* காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்கள் உள்நுழைய அனுமதியில்லை.
* முகக் கவசம் இல்லாதவர்கள் உள்நுழைய அனுமதியில்லை.
* ஒவ்வொரு சலூன் கடையின் நுழைவாயிலிலும் கை சுத்திகரிப்பான் இருப்பது அவசியம்.
* ஊழியர்கள், முகக் கவசம், தலைக் கவசம் மற்றும் மேலாடைக் கவசம் அணிந்திருப்பது கட்டாயம்.
* ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய துண்டு, காகித ஷீட் பயன்படுத்துவது அவசியம்.
* ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பயன்படுத்தியப் பிறகு, உபகரணங்களை 30 நிமிடங்களுக்கு லைசால் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட உபகரண செட்களை பயன்படுத்த வேண்டுமாய் ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு வாடிக்கையாளருக்கான வேலையை முடித்தப் பின்னரும், கடைக்காரர் தன் கைகளை சுத்திகரிப்பான் கொண்டு சுத்தம் செய்வது கட்டாயம்.
* ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் குறிப்பிட்ட நேரம் அல்லது டோக்கன் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
* ஒவ்வொரு இருக்கைக்கு இடையிலும் குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
* கார்பெட் மற்றும் தரையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
* அனைத்துப் பயன்பாட்டு இடங்களும் சோடியம் ஹைபோகுளோரைட் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
* பிளேடுகள், ரேஸர்கள் உள்ளிட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் முறையாக சேகரிக்கப்பட்டு, பயோமெடிக்கல் கழிவு அகற்ற ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.
* சமூக விலகல் மற்றும் இருமல் வருகையில் நடந்துகொள்ளும் முறை ஆகியவற்றை விளக்கும் போஸ்டரை கடையின் நுழைவு வாயிலில் ஒட்டி வைத்திருக்க ‍வேண்டும்.
* அனைத்து ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான விளக்கம் மற்றும் தெளிவை வழங்கியிருக்க வேண்டும். அவர்களில் யாரேனும் அறிகுறிகளை வெளிப்படுத்தினால், உடனடியாக மருத்துவமனை அல்லது 14410 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும். அவர்கள் முழுமையாக குணமடையும் வரை, கடைக்குள் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.