பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தொடா்ந்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வெள்ளி இரவு 9 மணி முதல் திங்கள்கிழமையான இன்று காலை 6 மணி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந் நிலையில் மாநிலத்தில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது: நாளை இரவு 9 மணி முதல் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.