நாட்டில் முதன் முறையாக தியேட்டர்களை திறக்க கர்நாடகம் முடிவு..

நடுத்தர வர்க்கத்தின் மாலை நேரப் பொழுது போக்கு, மதுபான கடைகளும், சினிமா தியேட்டர்களும் தான்.

ஊரடங்கால், கடந்த இரண்டு மாதங்களாக மதுக்கடைகளும், தியேட்டர்களும் மூடப்பட்டுக் கிடந்தன.

மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிந்த போது, குடிமகன்களுக்கு விடியல் பிறந்தது.

விலையைக் கடுமையாக அதிகரித்து மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

பாக்கி இருப்பது, சினிமா தியேட்டர்கள், மால்கள், பெரிய டெஸ்டாரெண்டுகள் மட்டுமே

நான்காம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில், அதன் பின் , இவற்றையும் திறக்க கர்நாடக பா.ஜக. அரசாங்கம் திட்டமிட்டுள்ளது..

இதனைக் கர்நாடக முதல் –அமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

‘’ பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது அதிகமாகியுள்ளது.

எனவே மால்கள் உள்ளிட்டவற்றைத் திறப்பது அவசியம் ஆகிறது. இதனைத் திறக்க அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அனுமதி கிடைக்கும்  என்று நம்புகிறேன்’’ என்று கூறி, திரையரங்கு உரிமையாளர்கள், ஓட்டல் அதிபர்கள் உள்ளிட்டோர் வயிற்றில் பால் வார்த்துள்ளார், எடியூரப்பா.

– ஏழுமலை வெங்கடேசன்