பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அவசர நிலை அறிவிக்கவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் சுமார் 4000 பேரைப் பலி வாங்கி உள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது.  கேரளாவில் சுமார் 10க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஐடி ஊழியருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   அவர் குடும்பத்தினர் உட்பட மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாடெங்கும் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளன்ர்.

கர்நாடகாவில் சுமார் 1000 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 446 பேர் இரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருந்தார்.   இதனால் கர்நாடகாவில் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தையும் மூட உத்தரவு இடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி மக்களை மேலும் பிதியில் ஆழ்த்தியது.

இதை மறுத்து கர்நாடக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அந்த அறிவிப்பில்,, “மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தேவையான போது முடிவெடுக்கலாம்.

ஒருவேளை கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அந்த பகுதியில் மக்கள் நுழையவும் வெளியேறவும் தடை விதிக்கலாம்.  அத்துடன் பள்ளிகள் அலுவலகங்களை மூடுவதற்கும் பொதுக்கூட்டங்களை ரத்து செய்வதற்கும் உத்தரவு பிறப்பிக்கலாம். அதைப் போல்  போக்குவரத்திற்கும் தடை விதிக்கலாம். எந்த ஒரு அரசு அல்லது தனியார் கட்டிடத்தை கொரோனா வைரஸ் பாதிப்பிற்காகத் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிமை உண்டு.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அனைத்து அரசுத் துறைகளின் ஊழியர்களும் சம்பந்தப்பட்ட பகுதியின் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துடன் எப்போதும்  தொடர்பில் இருக்க வேண்டும்.  மாநில அரசின் இந்த விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும், நிறுவனமும் அல்லது அமைப்பும், ஐபிசியின் 188 வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாகக் கருதப்படும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.