பரப்பன அக்ரஹாரா சிறை விவகாரம் : சட்ட ஆலோசகர் கடிதத்தால் மேலும் ஒரு பரபரப்பு

--

பெங்களூரு

ரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு விசேஷ வசதிகள் செய்து கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த சிறை பற்றி அரசு சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரிஜேஷ் காலப்பா உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்.  இவர் கர்னாடகா அரசின் சட்ட ஆலோசகராக பணி புரிந்து வருகிறார்.  இந்தப் பணி அமைச்சர் பதவிக்கு சமமானது.  இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.  சமீபத்தில் சசிகலாவுக்கு கர்னாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் விசேஷ வசதிகள் செய்து கொடுத்ததாக புகார் எழுந்தது.  தற்போது அந்த சிறை பற்றி பிரிஜேஷ் ஒரு கடிதத்தை கர்னாடகா முதல்வருக்கு எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், காணப்படுவதாவது

 

மதிப்பிற்குரிய ஐயா.

பரப்பன அக்ரஹாரா சிறை 1998 ல் திறக்கப்பட்டது. பின் பெங்களூரு மத்திய சிறையாக 2000ஆம் வருடம் மாற்றப்பட்டது.  அங்குள்ள அனைத்து கைதிகளுக்கும் 2000ஆம் வருடம் முதல் இன்று வரை விசேஷ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.  அவர்களுக்கு அந்த வசதிகள் கொடுக்கப்பட்டதற்கான சூழ்நிலைகளையும் ஆராய வேண்டும்.

தாங்கள் சிறையில் வசதிகள் செய்து கொடுத்தமைக்காக லஞ்சம் வாங்கப்பட்டது குறித்து விசாரிக்க ஒரு அதிகாரியை நியமித்ததாக அறிகிறேன்.  அதிகாரி திரு வினய் குமார் அவர்களை, விசாரணையை மேலும் விரிவு படுத்தி 2000ஆம் வருடத்தில் இருந்து யார் யாருக்கு என்னென்ன வசதிகள் யாரால் செய்து தரப்பட்டது என விசாரிக்க ஆணையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  அத்துடன் இந்த விஷயத்தில் சில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், மற்றும் மந்திரிகளின் தலையீடுகள் மற்றும் தலையிடாமை ஆகியவை குறித்தும் கவனிப்பது நல்லது.

தங்கள் நம்பிக்கையுள்ள

(கையொப்பம்)

கடிதம் முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதப்பட்டுள்ளது.