பெங்களூரு

ர்நாடக மாநில அரசு ரூ.35 முதல் 45 லட்சம் விலையுள்ள வீடுகளுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தை 3% ஆகக் குறைத்துள்ளது.

நாடெங்கும் தற்போது வீடுகள் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது.  கொரோனா தாக்கத்துக்குப் பிறகு மேலும் விற்பனை குறைந்துள்ளது.  பல நகரங்களில் கட்டுமான தொழில் அடியோடு நசிந்துள்ளது.   எனவே இந்த வீடுகள் விற்பனைக்கான முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை எழுப்பி உள்ளன.

இதையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் முத்திரைத்தாள் கட்டணம் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது.   அதாவது ஏற்கனவே முத்திரைத்தாள் கட்டணம் 5% ஆக இருந்தது.   இந்த வருடம் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை நடைபெறும் விற்பனைகளுக்கு முத்திரைத்தாள் விற்பனை 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று கர்நாடகா மாநிலத்தில் அம்மாநில முதல்வரும் நிதித்துறை அமைச்சருமான எடியூரப்பா இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.  அதில்  மகாராஷ்டிரா மாநிலத்தைப் பின்பற்றி ரூ.35-45 லட்சம் வரையிலான வீடுகள் விற்பனைக்கான முத்திரைத்தாள் கட்டணம் 5% இருந்து 3% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனராக் கட்டுமான நிறுவனத் தலைவர் அனுஜ் பூரி, “இந்த அறிவிப்பைக் கேட்கும் போது பலருக்கும் இதன் மூலம் கட்டுமான தொழில்களுக்கு நல்ல முன்னேற்றத்தை அளிப்பது போல் தோன்றலாம் ஆனால் அது உண்மையானது இல்லை.  மகாராஷ்டிராவில் அனைத்து விலை உள்ள வீடுகளுக்கும் இந்த முத்திரைத்தாள் கட்டணக் குறைவு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெங்களூருவில் ஒரு தரப்புக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   கர்நாடகா மாநிலத்தில் குறிப்பாகப் பெங்களூரு நகரில் மட்டும் 59,350க்கும் மேல் வீடுகள் விற்பனைக்கு உள்ளன.  இதில் வெறும் 24% வீடுகள் மட்டும் ரூ.45 லட்சத்துக்கு கீழ் உள்ளன.  மீதமுள்ளவை ரூ.45 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடி விலையில் உள்ளன. எனவே இந்த அறிவிப்பால் எவ்வித பயனும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.