பெங்களூரு: பிராமணர்களை புண்படுத்தும் வகையில் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பகுதியை நீக்க கர்நாடகா அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அம்மாநில கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் மற்றும் மொழி பாடப்புத்தகங்களில் உள்ளடக்கங்களை ஆராய ஆசிரியர்கள், வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும், 15 நாட்களில் இந்த குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த குறிப்பிட்ட பாடங்களில் பால், உணவு தானியங்கள், நெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் பற்றாக்குறைக்கு பிராமணர்கள் செய்யும் சடங்குகள் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில பாடங்கள் புண்படுத்தும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து பிராமண சங்க நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.