Random image

கர்நாடகாவை மிரட்டும் கனமழை – நிரம்பி வரும் அணைகளால் வெள்ள அபாயம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. அணைகளை ஒட்டி உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Dams

கடந்த இரண்டு நாட்களாகவே கர்நாடகாவில் அதிகளவில் மழை பெய்துவருகிறது. இதனால் பலபகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை சிக்கமகலுரு, ஸ்ரீங்கேரி, பாலேஹன்னூர், நரசிம்மராஜபுரா, முதிகேரு, குத்ரேமூக் மற்றும் கொப்பா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் 29 இடங்களில் அளவுக்கு அதிகமாக மழை பொழிந்துள்ளது.

இதனால் துங்கா, பத்ரா மற்றும் ஹேமாவதி ஆறுகளில் வழக்கத்தை விட அதிகளவிலான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. லிங்கனமக்கி அணையின் நீர்மட்டம் 1785.90 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 1819 அடி என்ற நிலையில் அணை உடையும் தருவாயில் உள்ளத். இதேபோல், பத்ரா அணையின் கொள்ளளவு 186 அடி என்ற நிலையில் நீர்மட்டம் 162.1 அடிக்கு உயர்ந்துள்ளது. துங்கா அணையின் நீர்மட்டம் 588.24 அடியை எட்டியுள்ளது.

karnataka

இதேபோல் காவிரி ஆறு முதல் முறையாக ஒரு லட்சம் கனஅடிகளை தண்ணீர் நிரம்பியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காவிரி ஆறு கொடகு பகுதியில் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுத்தப்பட்டது.

இதற்கு முன்பாகவே கர்நாடகாவின் முதலமைச்சரான குமாரசாமி காவிரி ஆற்றிற்கு அதிகளவில் வரும் தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு உடனடியாக செல்ல தாலுகா மற்றும் பஞ்சாயத்துக்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை தொடர்ந்தால் அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

அவ்வாறு ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்பு குழுக்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.