பெங்களூரு: விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து ட்வீட் செய்த விவகாரத்தில் கங்கனா ரணாவத் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் விவசாய சட்டத்திற்கு எதிராகவும், சிஏஏவுக்கு எதிராகவும் போராட்டம் செய்பவர்களை விமர்சித்தும் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் நாயகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கங்கனா ரணாவத் மீது எப்ஐஆர் பதிவு செய்யுமாறு கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் உள்ள க்யாதசந்த்ரா காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த எப்ஐஆரை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கங்கனா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்பி சந்தேஷ் தலைமையிலான அமர்வு, வழக்கை ரத்து  செய்ய மறுத்துவிட்டது. விசாரணைக்கு இணங்குமாறும் தெரிவித்ததோடு வழக்கையும் மார்ச் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த கங்கனா, சிஏஏ குறித்து பலர் தவறான தகவல்களை பகிர்ந்ததால் கலவரங்கள் ஏற்பட்டதாகவும், அவர்கள் தான் இப்போது விவசாய சட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை பகிர்ந்து வருவதாகவும் கூறியிருந்தார். நாட்டில் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.