கர்நாடகா: கட் அவுட்களுக்கு தடை போட்ட குமாரசாமி

 

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் தனக்கு கட்-அவுட் மற்றும் பேனர்களை வைக்க வேண்டாம் என குமாரசாமி தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பல அதிரடி திருப்பங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. ம.ஜ.த. கட்சித் தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்கிறார்.

சட்டபேரவை அமைந்துள்ள  விதான் சவுதாவுக்கு வெளியே மாலை 4.30மணிக்கு நடைபெறும் விழாவில் ஆளுநர் வஜூபாய் வாலா, குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த நிலையில்  அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் நடந்தாலே கட் அவுட்டுகள், பேனர்களை சாலையெங்கும் வைப்பது வழக்கம். இதனால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும் விபத்துகள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனக்கு கட்-அவுட் மற்றும் பேனர்களை வைக்க வேண்டாம் என்று குமாரசாமி தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தனது தொண்டர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். அதோடு பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.