பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்களான ஏஎச் விஸ்வநாதன், எம்டிபி நாகராஜு மற்றும் ஆர் சங்கர் ஆகிய மூவரும், அமைச்சர்களாக பதவி வகிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.

இந்த மூவரும், குமாரசாமி ஆட்சியின்போது, ‘ஆபரேஷன் கமலா’ மூலமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதேசமயம், அப்போதைய சபாநாயகரால் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவர், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நின்று தோல்வியடைந்தனர். அதுவும், சங்கருக்கு போட்டியிட வாய்ப்பே தரப்படவில்லை. இந்நிலையில், இவர்களை மந்திரியாக்கும் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே, இவர்கள், சட்டமேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இதை விசாரித்து, இதுதொடர்பாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் கூறியதாவது; ஒரு உறுப்பினர் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அவர், அந்த சட்ட அவ‍ையின் ஆயுள்காலம் முழுவதும் அந்த தடைக்கு உட்படுவார். அந்தவகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களால் அமைச்சர்களாக பதவியேற்க முடியாது. இது ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது உயர்நீதிமன்றம்.

சங்கர் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும், சட்ட மேலவைக்கு முறைப்படி தேர்வுசெய்யப்பட, விஸ்வநாத்தோ, முதல்வர் எடியூரப்பாவால் நியமிக்கப்பட்டவர்.