கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாட தடையில்லை!!

பெங்களூரு:

கர்நாடகா அரசு நடத்தவுள்ள திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

கர்நாடக அரசு சார்பில் திப்பு சுல்தானின் நினைவாக ‘திப்பு ஜெயந்தி’ கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த வருடம் கர்நாடக மாநிலம் குடகில் நடந்த திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் இந்த ஆண்டு திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று குடகினைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ரமேஷ், நீதிபதி தினேஷ் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.