சிறையில் சசிகலாவை சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர்!

பெங்களூர்:

மிழகத்தில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிலா நீக்கம்,  மற்றும் டிடிவி தினகரனின் பொதுக்குழுவுக்கு எதிரான அறிவிப்பு போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவை கர்நாடக அமைச்சர் ஒருவர் சந்தித்து பேசி வந்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. இவர் சிறை விதிகளுக்கு மீறி,  உல்லாசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி சிறைக்கு வெளியேயும் சென்று வந்தார்.

சிறைத்துறை டிஐஜி ரூபா எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக,சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர் சிறைக்கு வெளியே அடிக்கடி சென்று வந்ததும், சிறையில் சொகுசாக வாழ்ந்து வந்ததும் வெளி உலகுக்கு தெரிய வந்தது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த குழு விசாரணை நடத்தி வரும் வேளையில், கர்நாடக மாநில அமைச்ர்  ராமலிங்க ரெட்டி, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கர்நாடக உள்துறை அமைச்சராக இருக்கும்  ராமலிங்க ரெட்டி  முதல்முறையாக நேற்று அவர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் ஆய்வு நடத்தினார். அப்போது சசிகலா அடைக்கப் பட்டுள்ள பெண்கள் பகுதிக்கும் சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், கவுரி லங்கேஷை கொலை செய்தவர்கள் விரைவில் இதே சிறையில் அடைக்கப்படுவார்கள், அதேபோல சிறையில் யாருக்கும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்றார்.

சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சசிகலா உள்ளிட்ட அனைவரும் சிறை விதிமுறைப்படியே நடத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

ஆனால், சிறையில் உள்ள சசிகலாவிடம் அமைச்சர் தமிழில் பேசியதாகவும், அமைச்சரின் மனைவி மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதால் அமைச்சருக்கு தமிழும் தெரியும் என்றும்,  அமைச்சரை பார்த்து சசிகலா கையெடுத்து கும்பிட்டதாகவும், பதிலுக்கு ராமலிங்க ரெட்டியும் வணக்கம் தெரிவித்து சாப்பிட்டீர்களா என விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து கர்நாடக முதல்வர் அறிவித்தபடி,  சசிகலாவின் சொகுசு சிறை  வாழ்க்கை குறித்து உயர்மட்டக்குழு விசாரணை  செய்துவரும் வேளையில், மாநில உள்துறை அமைச்சரே சிறைச்சாலைக்கு ஆய்வு நடத்த செல்வதாக கூறி சசிகலாவை சந்தித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

You may have missed