கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்: போர்க்கொடி தூக்கிய 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி!

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்கி, மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குமாரசாமி தலைமையிலான மத சார்பற்ற ஜனதளம் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், மாநில பாரதியஜனதா ஆபரேசன் தாமரை என்ற பெயரில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் சுயேச்சைகள் உள்பட காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பண ஆசை காட்டி தன் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பாஜகவின் சதிச்செயல்களை கூட்டணி கட்சி தலைவர்கள் முறியடித்து வெற்றிகரமாக ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரமேஷ் ஜார்கிஹோளி, ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களும்  அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். கூட்டணியில் இருந்து கொண்டே மாநில அரசுக்கு சுயேச்சைகள் சிலரும் குடைச்சல் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், அதிருப்தியில் இருந்த இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்யும் வகையில் அவர்களுக்குஅமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்படி, ராணிபென்னூர் ஆர்.சங்கர், முல்பாகல் நாகேஷ் ஆகிய இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பெங்களூரு ராஜ்பவனில், நடந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அரசுக்கு ஏற்பட்டிருந்த ஆபத்து தற்காலிகமாக நீங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.