கோலார்:
ர்நாடகாவில் எட்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஆப்பிள் ஐ போன்கள் உற்பத்தி செய்யும் விஸ்ட்ரான் தொழிற்சாலையை ஊழியர்கள் சூறையாடினர். வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் ஐ போன்கள் தயாரிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் தொழிற்சாலை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு பணிபுரியும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் மூலம் ஊதியம் வழங்கக்கோரி பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதியம் வழங்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள், இன்று காலை தொழிற்சாலையை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த பொருட்கள் மற்றும் வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட பலர் உருட்டுக் கட்டையால் கண்ணாடியை அடித்து நொறுக்கி சூறையாடினர். உள்ளே இருந்த கார், பைக்குகளுக்கம் தீ வைக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கோலார் மாவட்டத்தில் அங்கு பரபப்பான சூழலே நிலவி வருகிறது.