சமூக இடைவெளியை எட்டி உதைத்த சுகாதார அமைச்சர்..

ர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைலையிலான பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.

அங்கு சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் சுதாகர், கொரோனா தடுப்பு பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் என்று அவரது பா.ஜ.க. கட்சியும், ஆட்சியும் உரக்க ஒலித்து வருகிறது.

ஆனால் அமைச்சர் சுதாகர், பெங்களூருவில் உள்ள தனது பங்களாவின் நீச்சல் குளத்தில் தனது பிள்ளைகளுடன் ,சமூக இடைவெளி குறித்து கவலைப்படாமல் உற்சாகமாக நீந்தி பொழுதை கழித்துள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும், அமைச்சர் சுதாகர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய்க்கு பலர் செத்து மடியும் நிலையில், நீச்சல் குளத்தில் அமைச்சர் பொழுது போக்கியதை பலர் விமர்சனம் செய்தனர்.

இதனால், நீச்சல் குளத்தில், குளிக்கும் தனது படத்தை ட்விட்டரில் இருந்து நீக்கி விட்டார்.
ஆனாலும் அமைச்சர் மீதான புகார்கள் ஓயவில்லை.

’’நாடே கொரோனாவால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள சூழலில், நீச்சல் குளத்தில் நேரம் செலவளிப்பது ஒரு அமைச்சருக்கு அழகா? “ என்று கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், ‘’ பொறுப்பில்லாமல் செயல் பட்டுள்ள சுதாகர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் சுதாகர், முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ’ஆபரேஷன் தாமரை’’ நிகழ்வின் போது, பா.ஜ.க.வுக்கு தாவியவர்.