பெங்களூரு:

ர்நாடக சட்டபேரவையில் இன்று எடியூரப்பா அரசு மீதான நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்ற நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கர்நாடக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில், அவர்கள் கடிதம் மீது  தீவிரமாக விசாரணை நடத்தப்பட்ட பிறகே  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் ரமேஷ்குமார். இது தொடர்பாக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் தொடர்பாக, கடந்த 3 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், நேற்று திடீரென மீதமுள்ள 14 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில், 106 எம்எல்எக்கள் ஆதரவு பெற்று எடியூரப்பா அரசு தலை தப்பியது.

இதையடுத்து, தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ்குமார் அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்து விட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து கைக்கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு  இருக்கையிலிருந்து எழுந்து சென்றார்.

சபாநாயகர் ரமேஷ்குமார்மீது அதிருப்தியில் இருந்து வந்த பாஜகவினர், பாஜகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகரான கே.ஜி.போ பையாவை சபாநாயகராக நியமிக்கும் வகையில், ரமேஷ்குமார் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் ரமேஷ்குமார் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்து உள்ளார்.  இவர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவி ஏற்றதும் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  மொத்தம் 14 மாதம் 4 நாட்கள் சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.