கர்நாடக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: காங்கிஸ் முன்னிலை…. பாஜகவுக்கு பின்னடைவு

பெங்களூரு:

ர்நாடக மாநில  உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த (ஆகஸ்டு) மாதம் 31ந்தேதி  நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. அதுபோல பாஜகவும் தனித்தே போட்டியிட்டது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 2,709 வார்டுகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1,710 வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் காங்.,846 இடங்கள் வெற்றிபெற்று முன்னிலை வகித்து வருகிறது. அதைத் தொடர்ந்து, பா.ஜ 788 இடங்களிலும், ஆளும் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் 221 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சுயேட்சைகள் 195 இடங்களை கைப்பற்றி உள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே,  29 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேவேளையில்,  ராய்ச்சூர், சாம்ராஜ்நகர் ஆகிய 2 மாவட்டங்களில் 2 வார்டுகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மாநில சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்ற  காங்கிரஸ் கட்சி  மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி வரும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வெற்றிகளை குவித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியாக இந்த உள்ளாட்சி தேர்தல் கருதப்படுவதால், காங்கிரஸ் கட்சியின் வெற்றி பாரதியஜனதாவில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டே இவ்வளவு வெற்றியை பெற்று காங்கிரஸ் கட்சி, ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் அனைத்து வார்டுகளையும் கைப்பற்றி இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

எனினும்,  தற்போதைய நிலையில், காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி 55 சதவிகித இடங்களையும், பாஜக 35 சதவிகித இடங்களையும், சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள்10 சதவிகித இடங்களையும் பெற்றுள்ளது.