மேகதாது அணை கட்டப்பட உள்ள இடத்தில் கர்நாடக அமைச்சர் சிவகுமார் நேரில் ஆய்வு

பெங்களூரு:

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட உள்ள இடத்தில் கர்நாடக அமைச்சர் சிவகுமார் அதிகாரிகளுடன்  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக தெரிவித்துள்ள கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், அணை கட்டப்படும் இடத்தில் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அணை கட்டப்பட உள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு, 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு மத்திய நீர்வளத்துறையும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த பிரச்சினை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசு நேற்று சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்தியஅரசுக்கு அனுப்பி உள்ளது. அதுபோல உச்சநீதி மன்றத்தில் மேகதாது அணை அனுமதி எதிர்த்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் இடத்தில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆய்வு செய்து வருகிறார். மாநில  பொதுப்பணித்துறை, வனத்துறை, வல்லுநர் குழுவுடன் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மேகதாதுவில்   64 டிஎம்சி தண்ணீர் சேமிக்கும் அளவுக்கு முதல் கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் சிவகுமார், அணையை கட்டியே தீருவோம் என்று முரண்டு பிடித்து வருகிறார்.